தேசிய செய்திகள்
இஸ்ரோ தற்போது பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்திற்கான கருவி - மஹுவா மொய்த்ரா எம்.பி. விமர்சனம்
தேசிய செய்திகள்

'இஸ்ரோ தற்போது பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்திற்கான கருவி' - மஹுவா மொய்த்ரா எம்.பி. விமர்சனம்

தினத்தந்தி
|
26 Aug 2023 10:17 PM IST

தேசியவாத வெறியைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு திட்டமும் பயன்படுத்தப்படும் என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டர், கடந்த 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த லேண்டரில் பொருத்தப்பட்டிருந்த 'பிரக்யான்' ரோவர் கருவி தற்போது நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சந்திரயான்-3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதனிடையே தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, பெங்களூருவுக்குச் சென்று விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதோடு, நிலவில் சந்திரயான்-2 தரையிறங்கிய பகுதிக்கு 'திரங்கா' என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய பகுதிக்கு 'சிவசக்தி' என்றும் பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் இனி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 23-ந் தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரோ தற்போது பா.ஜ.க.வின் 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கான கருவியாக மாறியுள்ளது. தேர்தலுக்கு முன் தேசியவாத வெறியைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு திட்டமும் பயன்படுத்தப்படும்.

பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்திய அறிவியல் ஆராய்ச்சியை, மோடியின் சாதனையாக மாற்றுவதற்கு பா.ஜ.க. ஆதரவாளர்கள் 24 மணி நேரமும் வேலை செய்து வருகிறார்கள். இந்தியா விழித்துக் கொள்ள வேண்டும். நான் தேசத்திற்கு எதிரானவள் அல்ல" என்று மஹுவா மொய்த்ரா எம்.பி. பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்